மயிலன் ஜி சின்னப்பன் - அநாமதேய கதைகள்- வாசிப்பு குறிப்பு
அநாமதய கதைகள் புத்தகத்தின் மீதான வாசிப்பனுபவம் 14.09.2025 அன்று நடந்த இணைய சந்திப்பிற்காக பகிர்ந்து கொண்டது. மயிலன் ஜி சின்னப்பனின் அநாமதேய கதைகள் தொகுப்பில் இருக்கும் கதைகளை தற்கால நவீனத்துவ கதைகள் என்று சொல்லலாம். எனவே அதற்கே உரிய சொற்சிக்கனமும் கச்சிதமான உரையாடல்களும் கூர்மையான மொழியும் கொண்டவை. ஆனால் சில இடங்களில் அவரது தன்னிச்சையான அக வெளிப்பாடுகள் எவ்வகையிலும் கட்டுப்படுத்தப்படாமல் வெளிப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. குறிப்பாக ஊடுவெளி கதையில் விலைபெண்ணாக வரும் ஜோதியை குறித்து அவள் அருட்பெருஞ்சோதி என்று சொல்லுமிடம். நவீனத்துவத்திற்கேயுரிய நம்பிக்கையற்ற தன்மையும் கசப்பினை வெளிப்படுத்தும் பண்பினையும் இயல்பாக கொண்டு மனிதனின் அகத்துள்ளும் சமூகத்துள்ளும் இருக்கும் மலத்தில் நெளியும் புழுவினை உருப்பெருக்கிக் கொண்டு காட்டுபவையாக இவை அமைந்துள்ளன. உலர் சிறுகதையில் வரும் ஒரு வரியில், பருந்து எப்படி கலசத்திற்கு நீரூற்றும் போது சரியாக வந்து விடுகிறது என்பதற்கு அது பக்தி என்று சொல்லலாம் அல்லது பெரியப்பாவை போன்றவர்கள் சோற்றுக்காக எனலாம். எனக்கும் சோற்றுக்காக என்பதாகத்தான் தோன்றுக...