மயிலன் ஜி சின்னப்பன் - அநாமதேய கதைகள்- வாசிப்பு குறிப்பு
அநாமதய கதைகள் புத்தகத்தின் மீதான வாசிப்பனுபவம் 14.09.2025 அன்று நடந்த இணைய சந்திப்பிற்காக பகிர்ந்து கொண்டது.
மயிலன் ஜி
சின்னப்பனின் அநாமதேய கதைகள் தொகுப்பில் இருக்கும் கதைகளை தற்கால நவீனத்துவ கதைகள்
என்று சொல்லலாம். எனவே அதற்கே உரிய சொற்சிக்கனமும் கச்சிதமான உரையாடல்களும் கூர்மையான
மொழியும் கொண்டவை. ஆனால் சில இடங்களில் அவரது தன்னிச்சையான அக வெளிப்பாடுகள் எவ்வகையிலும்
கட்டுப்படுத்தப்படாமல் வெளிப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. குறிப்பாக ஊடுவெளி கதையில்
விலைபெண்ணாக வரும் ஜோதியை குறித்து அவள் அருட்பெருஞ்சோதி என்று சொல்லுமிடம். நவீனத்துவத்திற்கேயுரிய
நம்பிக்கையற்ற தன்மையும் கசப்பினை வெளிப்படுத்தும் பண்பினையும் இயல்பாக கொண்டு மனிதனின்
அகத்துள்ளும் சமூகத்துள்ளும் இருக்கும் மலத்தில் நெளியும் புழுவினை உருப்பெருக்கிக்
கொண்டு காட்டுபவையாக இவை அமைந்துள்ளன.
உலர் சிறுகதையில்
வரும் ஒரு வரியில், பருந்து எப்படி கலசத்திற்கு நீரூற்றும் போது சரியாக வந்து விடுகிறது என்பதற்கு அது பக்தி
என்று சொல்லலாம் அல்லது பெரியப்பாவை போன்றவர்கள் சோற்றுக்காக எனலாம். எனக்கும் சோற்றுக்காக
என்பதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் பருந்து மட்டுமே அது பறப்பதற்கான காரணத்தை அறியும்
என்பதாக வருவதை மயிலனின் எழுத்துக்களின் முறையாக சுட்டலாம் என்று நினைக்கிறேன். அவர்
எதையும் மிகைப் படுத்தியோ புனிதப்படுத்தியோ காண முயல்வதில்லை. மனிதனின் பலத்தை விட
பலவீனங்களில் அதிக வெளிச்சத்தை பாய்ச்சுகிறார்.
இந்த தொகுப்பில்
இருக்கும் 12 கதைகளில் இடர், உலர் மற்றும் ஈடறவு ஆகிய மூன்று கதைகளும் ரேமண்ட் கார்வர்
வகைமையில் இருமைகளை சொல்லிச் செல்லும் கதைகளாக அமைந்துள்ளன. இடர் கதையின் இயற்கை பேரிடரில்
ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பால் வாழ்வினை முடித்துக்கொள்ளும் சேப்ராசு அண்ணனையும், அனைத்து
இழப்புகளையும் ஒப்பாரி வைத்து கரைத்து வாழ்வினைப் எப்படியாவது பற்றிக் கொள்ள துடிக்கும்
அவரது மனைவியையும் காணலாம்.
உலர் சிறுகதையில்
டாக்டராக விரும்பி தோல்வியுற்று தற்கொலை செய்து கொள்ளும் திட்டக்குடியான் பிழைக்க வேண்டுமென்று
மொட்டையடித்துக்கொள்ளும் டாக்டர் படிக்கும் நண்பன், அவன் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று
மனதார நினைக்கிறான். ஆனால் திட்டக்குடியான் நிலத்தரகில் சட்டென்று ஜெயித்து பொருளாதாரத்தில்
பல மடங்கு உயர்ந்து அரசியல் அதிகாரத்தையும் பெறும் போது அவன் மனம் காழ்ப்பினை உருவாக்கிக்
கொள்ளும் விந்தை ஆகிய இருநிலைகளும் கதையாகிறது.
ஈடறவு சிறுகதையில்
சைக்கிளை தொலைத்துவிட்ட 13 வயது சிறுவன் மேல் வீட்டு அண்ணனின் சிபாரிசுடன் காவல் நிலையம்
செல்கிறான். இத்தனை குற்றங்களையும் கண்டு பிடித்து கொடுக்க இங்கிருக்கும் 10 பேரால்
எப்படி முடியும் என்று நினைக்கும் சிறுவனின் சைக்கிள் திருட்டினை எப்படி கையாளுகிறார்கள்
என்பதனை காண்கிறான். ஆரம்பத்தில் இவன் திருடனாக நினைத்துக் கொள்ளும் 30 வயது மதிக்கத்தக்க
ஒருவன் காவல் நிலையத்தில் கை மூட்டு நசுக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தி லத்தியால் அடிக்கப்படுகிறான்.
இறுதியில் அவன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறும் போது அவன் டீயை பாலித்தீன் கவரோடு
சாய்த்துக் குடிப்பதை காண்கையில் அவன் திருடனாக இருக்கவியலாது என்னும் நிலைக்கு வருகிறான்.
குற்றத்தினை கண்டுபிடிப்பவர்கள் உண்மையிலேயே குற்றமற்றவர்களா, குற்றவாளி என்று சொல்லப்படுபவன்
உண்மையில் குற்றவாளியா என்ற இருமைக்கு தள்ளப்படுகிறான். மேற்கூறிய இந்த மூன்று கதைகளும்
இரு பக்கத்தையும் சொல்லி கேள்வியாக மாறி நம்முன் நிற்கிறது. எனது தனிப்பட்ட வாசிப்பில்
இவ்வகையான சிறுகதைகள் அதிக பாதிப்பை உருவாக்குவதில்லை என்றே தோன்றுகிறது.
அடுத்ததாக
ஒற்றை மனை, ஆகுதி, ஆதாமின் ஏவாள், ஊடுவெளி மற்றும் எக்கழுத்தம் ஆகிய கதைகள் சமூகத்தில்
எழுதப்படாத விதிகளாக மனித மனதில் உள்ளவற்றை கதைக்கருவாக கொண்டவை.
ஒற்றை மனை
கதையில் மனையின் உரிமையாளர் மனையை சுற்றி காலனி உருவாகி கொண்டிருப்பதால் வாங்க வருபவர்கள்
அதைக் காரணமாக காட்டி நிராகரிக்கிறார்கள். ஆகவே அந்த காலனி சாதியை சார்ந்தவருக்கே விற்று
விடலாம் என்று எண்ணுகிறார். அதை உணர்ந்த சுதாகரன் மனையை வாங்காமல் தவிர்த்து விடுகிறார்.
நேரடியான கதை சொல்லலாக அமைந்துவிடுகிறது இக்கதை.
ஆகுதி கதையில்
கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட கல்லூரி பெண் தற்கொலைக்கு முயன்று 90விழுக்காடு காயத்தோடு
அனுமதிக்கப்படும் மருத்துவனையில் அதே வயதினையொத்த மருத்துவர் மோஹனா பணிபுரிகிறார்.
அவளது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை மோஹனாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். காயமடைந்த பெண்ணின்
தாய் அவள் பட்ட துயரங்கள் வெளியில் கசிந்தாள் சமூகம் அவமானமாகவும் அசிங்கமாகவும் கருதும்
என்பதனால் அதனை சொல்ல வேண்டாம் என்று தடுக்க முயற்சிக்கிறாள். மோஹனா டீனிடம் சொல்லி
மரண வாக்கு மூலத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தாய் இறுதி வாக்கு மூலம் கொடுக்க
விடாமல் பெண்ணை மரணிக்க செய்கிறாள். இன்னொரு பக்கம் மோஹனாவின் காதலன் ராஜுவுடன் இருக்கும்
துளி இன்பமும் மீதி வலியும் நிறைந்த உறவு. ராஜு தான் மோஹனாவிற்கு தைரியம் அளித்து டீனிடம்
புகாரளிக்க சொல்வதாக இருந்தாலும் அவனும் மோஹனாவை உடமைப் பொருளாக பார்க்கும் பார்வை
அப்படியே தான் இருக்கிறது. சமூகம் பெண்ணை உடமைப் பொருளாக பார்ப்பதையும் அவள் வன்முறைக்கு
ஆளாகும் போது கூட கலங்கமடைந்து விட்டதாக அவமானமாக கருதுவதையும் இந்த கதை வலுவாக உணர்த்துகிறது.
ஆதாமின் ஏவாள்
கதை திருமணம் ஆகிய முன்னாள் காதலி அவள் காதலனை சந்திக்க விரும்பும் போது இருவரின் மனமும்
செயல்படும் விதத்தை சொல்கிறது. அவன் அவள் மனதில் இன்னும் தனக்கு இடம் இருக்குமா என்றும்,
மீண்டும் தன்னுடன் வாழ்க்கையை துவங்க விரும்புகிறாளா என்றும் அறிய விழைகிறது. அவள்
தன் குடும்ப வாழ்க்கையை பற்றி பேச விரும்பாத போது இவனுக்கு எதற்கு இத்தனை வருடம் கழித்து
தன்னுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள் என்று தோன்றி தன்மானத்தை சீண்டுகிறது. அவள்
எதற்காக திருமணமாகி ஒன்றரை வருடம் கழித்து இவனுடன் சினிமாவிற்கு சென்று கைகோர்த்து
வீட்டிற்கு அழைத்து முத்தமிடுகிறாள் என்பதன் ஆடலும் முடிவில்லாது நீளும் கேள்வியாக
மாறிவிடுகிறது. சமூகம் வகுத்துள்ள ஆண் பெண் உறவிற்கான விதிகள் எப்போதும் மீறப்படும்
துடிப்புடன் மனதினுள் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஊடுவெளி கதையில்
இளங்கோவின் உயர் அதிகாரி முகுந்தன் தன் மனைவியுடன் கொண்டுள்ள உறவை தடுக்க இயலாது இருப்பவன்
தனக்கு கீழே வேலை பார்க்கும் நிரந்தரமற்ற ஊழியனான கனகுவை வேலையிலிருந்து நீக்கி அந்த
குரூரத்தில் மகிழ்கிறான். அவளது மனைவியுடன் முகுந்தன் ஒன்றாக இருப்பதை நேரில் பார்த்துவிட்டு
மீள முடியாது தவிப்பவன் கனகுவிடம் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து தருமாறு கேட்கிறான். அவ்வாறு
வந்த பெண் ஜோதியுடன் கூடி மனைவியின் மீதான வன்மத்தை தணித்துக் கொள்கிறான். அவள் அதிகாலையில்
அவனது அறையிலிருந்து வெளியேறி கனகுவிடம் ஒன்றாக இருப்பதை பார்த்து மனம் பதைத்து இருவரையும்
கண்டபடி அடித்துவிட்டு தனது அறைக்கு திரும்பி கஞ்சாவை இழுக்கிறான். அப்போது அவன் கனகுவின்
மனைவியாக அந்த ஜோதியை கற்பனை செய்து கொண்டு மகிழ்கிறான். கனகு அவனிடம் அவனது பழைய சம்பளப்
பணத்தை விலைப்பட்டியலில் எழுதி நீட்டுகிறான். ஒவ்வொருவரும் தனக்கு செல்லுபடியாகுமிடத்தில்
எவ்வாறு தங்களது அதிகாரத்தை பழிவாங்கலை நடத்துகிறார்கள் என்ற முடிவேயற்ற காம குரோத
மோகங்களின் ஆடலின் சில பக்கங்களை சொல்கிறது.
எக்கழுத்தம்
கதை எவ்வாறு உயர்/இடைநிலை சாதிகளின் மனதில் சாதிய வன்மம் இயல்பான ஒரு நிகழ்வினைப் போல்
அமைந்துள்ளது. அது சாதிய ஆதிக்கம் என்பதையோ தீண்டாமை என்பதையோ உணராமல் இயல்பான அன்றாட
செயலாக இருப்பதை மகேந்திரனின் செயலில் இருந்தே இறுதியில் அவருக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்த கதைகள்
பெரும்பாலும் ஏற்கனவே பேசுபொருளாக இருப்பவற்றையே கருவாக கொண்டுள்ளதோடு, புதிய பார்வைக்
கோணமும் இல்லாமல் இருப்பது இவற்றின் பலவீனம் என்று கருதுகிறேன்.
ஔபத்யம் கதையில்
பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் சுரக்காததால் பாலூட்ட முடியாமலும் மாமியாரின் நச்சு வார்த்தைகளிலும்
சிக்கி தவிக்கும் பெண்ணை, அவளது கணவன் அவனது வாழ்வில் நடந்த ஒரு கதையை சொல்லி விடுவிக்கிறான்.
அந்த கதையில் நடன விடுதியில் பாங்கின் போதையில் அங்கு நடனமிடும் ஒரு பெண் அவனது பழைய
காதலி போல் தோன்றி சிறு உரசல் நிகழ்கிறது. பின்பு அந்த விடுதி பெண்ணை அவள் வீட்டிற்கு
செல்லும் வழியில் பின் தொடர்ந்து கொலை செய்வதாக தோன்றுகிறது. ஆனால் இது உணமையாக நடந்ததா
அல்லது போதையில் நிபைத்துக் கொண்டதா என்று தெரியாமல் அவதிப்படுகிறான். பின் எந்த ஆதாரமும்
இல்லாததால் மனதினை தேற்றிக் கொண்டு அமைதியடைகிறான். இவ்வாறு தன் மனைவியிடம் சொல்லிய
கதையை பழைய காதலியிடம் அன்றிரவு சொல்கிறான். அவள் இன்னும் உனக்கு பழைய காதலியின் நினைப்பு
இருக்குமென்றால் அவளுடன் எவ்வளவு நெருக்கமாக பழகியிருப்பாய் என்பதாகவே அவள் மனைவி நினைத்துக்
கொள்வாள் என்று சொல்கிறாள். ஆனால் அவளது மனைவி மறுநாள் அவளது மாமியாரின் வார்த்தைக்
கணைகளை சிரித்துக் கொண்டே இயல்பாக கடந்து செல்வதாக கதை முடிகிறது. அவளது மன உலைச்சலை
தவிப்பை அவனது இந்தக்கதை எவ்வறு ஆற்றுகிறது என்பது புரியவில்லை. உணமையிலேயே கொலை செய்து
இருந்தானென்றாள் அது எந்த செய்தியிலும் இடம் பெறாமல் போக வாய்ப்பில்லை. அல்லது இவ்வளவு
காலத்தில் இந்த நிகழ்வின் அழுத்தம் படிப்படியாக குறைந்து தன் மனதிற்கு மட்டுமே தெரிந்திருப்பது
போல் அவளுடைய சிக்கலும் மாறிவிடும் என்று எடுத்துக் கொள்கிறாளா என்பது சரியான வாசிப்பாக
அமையுமா என்ற சந்தேகத்துடன் எனக்கு புரியாத கதையாகவே இதனை கொள்கிறேன்.
ஓர் அயல்
சமரங்கம் கதை நாட்டை விட்டு வெளியே செல்பவர்கள் மற்ற நாட்டினருடன் பழகும் போது தன்
நாட்டினை அவர்களே சுமப்பது போல் அல்லது நாடுகளுக்கு இடையேயான பழகுதல் போல் அவர்களது
சந்திப்பை மாற்றிக் கொள்ளும் பாவனையை மேற்கொள்வதின் சித்திரம். இதன் வழியே அவர்கள்
தங்கள் நாட்டிற்கு பாதுகாவலராகவும் தன் நாட்டிலிருந்து வந்திருப்பது போல் தெரிந்தால்
அவர்களுடன் பழகத் துடிப்பவராகவும் மேற்கொள்ளும் பாவனைகள் எத்தனை அபத்தமானதாக இருக்கும்
என்பதை கதை அற்புதமாக சித்திரிக்கிறது. மாறாத ரத்த தொடர்புள்ள சொந்தங்களை அடைவதும்,
அடையாளங்களையும் பெரும் சுமைகளாக கருதும் ரஷ்யன் அவனது நாட்டு அடையாளங்களை விட்டு இன்னொரு
மனிதனோடு இயல்பாக பழக முனைவதால் அழகான நட்பினையும் அந்த ஜப்பானிய பேராசியருடன் மாணவ
உறவினையும் உருவாக்கிக் கொள்கிறான். நவீனத்துவ கதைகள் பெரும்பாலும் தங்களை அல்லது சூழலை
ஆராய்ந்து கடைசியில் அபத்தங்களை மட்டுமே காட்டும் என்பதிலிருந்து இந்தக் கதை அபாரமாக
மனிதனின் மீதான நேர்நிலையோடு அமைந்துவிட்டிருப்பது முக்கியமான நகர்வாக இருக்கிறது.
அவ்வகையில் இது ஒரு முக்கியமான கதை என்று கருதிகிறேன்.
ஐ-பில் கதையில்
தனது காதலனுடன் விடுதியில் ஒன்றாக சேர்ந்திருக்கும் பெண் அவர்களது இறுதி சேர்க்கையின்
போது பாதுகாப்பற்று இருந்து விடுவதால் அவளுக்கு கருவுறுதல் குறித்தான பதற்றம் உண்டாகிறது.
அந்த கடைசி சேர்க்கையை அவளே முன்னெடுத்துள்ளாள். இந்நிலையில் அவளுக்கு உருவாகும் பதற்றத்தில்
காதலன் குறுஞ்செய்தியை பார்க்க தாமதாகும் வரை கூட பொறுத்திருக்க முடியாது பல வகையில்
அவளது சிந்தனைகள் ஓடுகிறது. அவளது அந்த சங்கடத்தை அவன் தலை மீது சுமக்க வேண்டும் என்று
நினைக்கிறாள். தன் தேவை முடிந்தவுடன் அவன் மாறிவிட்டான் என்பதாக நினைத்து அவனை வசைபாடி
கைப்பேசியை அணைத்து வைக்கிறாள். அனைத்துமே முடிந்து விட்டது போல் பொங்கி பொங்கி அழுகிறாள்.
அவளது அறை தோழிகள் என்ன்வென்று தெரியாமல் தேற்றுவதை விரும்புகிறாள். காலையில் அவனது
நிலையை சொல்லி எதற்காக இப்படியெல்லாம் என்னை இழிவு படுத்தியிருக்கிறாய் என்று கேட்கிறான்.
அவளுக்கு அதெல்லாம் முக்கியமே இல்லை. தனக்கு மாத்திரை கிடைக்காததைப் பற்றி மட்டுமே
பேசி அதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்கிறாள். அவன் மீண்டும் அவள் பேசியதை குறித்து கேட்கும்
போது அவனை திட்டி விட்டு, தொடர்பை துண்டிக்கிறாள்.
அடுத்ததாக
தன்னுடைய ஆண் நண்பனிடம் தான் காதலனுடன் ஒன்றாக இருந்ததையும் அதற்காக மாத்திரை தேவைப்படுவதாகவும்
சொல்கிறாள். எப்பொதும் ரகசியமாக அவனது தன் மீதான காதலை சீண்டி இன்பமடைபவள். இப்பொது
தனக்கு எந்த மாதிரியான உதவியாக இருந்தாலும் கேள்வியின்றி செய்யக் கூடியவனாகவே அவன்
இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவன் முயன்று பார்த்து விட்டு நாளைக்கு தான் மாத்திரை
கிடைக்கும் என்கிறான். அவன் “உனக்கு இதெல்லாம் தேவையா” என்று கேட்கும் ஒற்றை வரியால்
புண்பட்டு அவன் உதவியை மாத்திரை கிடைத்துவிட்டது என்று சொல்லி மறுத்துவிடுகிறாள். பின்பு
கிளம்பி மகப்பேறு மருத்துவரை சந்திக்க செல்வதாக கதை முடிகிறது. அவள் ஆரம்பத்திலேயே
மருத்துவரை சந்திக்கும் முடிவை எடுத்திருக்கலாம் ஆனால் அதற்கு எத்தனை வகையான பாவனைகளை
அவள் மனது புரிகிறது என்பதை ஒவ்வொன்றாக திரை விலக்கிக் காட்டுகிறார். இந்த பாவனைகள்
எவ்வாறு ஆண் பெண் உறவின் சிக்கல்களாக உறுப்பெறுகிறது என்பதை அற்புதமாக கடத்துகிறது.
இந்த தொகுப்பின் கதைகளில் சிறப்பான அனுபத்தை உருவாக்கியளிக்கும் முக்கியமான நவீனத்துவ
அழகியலின் கதையாக ஐ-பில் இருக்கிறது.
அன்நோன் சிறுகதையில்
யாரென்று தெரியாத பிச்சைக்காரன் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகி அவசர ஊர்தியில் மருத்துவனையில்
சேர்க்கப்படுகிறான். கடுமையாக அரசு ஊழியர்களுடனும் விதிகளுடனும் போராடி மூன்று மணி
நேர அறுவை சிகிச்சைக்கு பின் அவர் பிழைத்துக் கொள்கிறார். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள
சுவாசக்கருவி அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்யும் உறவினருக்காக பாதியிலேயே எடுக்கப்பட்டு
விடுகிறது. மருத்துவரால் ஒன்றும் செய்ய முடியாமல், கேட்பதற்கும் உறவினர்கள் யாருமில்லாமல்
விடப்படும் அவர் எப்படியோ எல்லாரும் அதிசயிக்கும் வகையில் பிழைத்துக் கொள்கிறார். ஆனால்
அவரது உடல் முன்னேற்றம் அடையும் தோரும் மற்றவர்களுக்கு பிரச்சனைகளை தரக் கூடியவராக
மாறுகிறார். ஒரு கட்டத்தில் மருத்துவராலேயே பொறுக்க முடியாமல் அனாதை ஆசிரமங்களிலும்
மனநோய் காப்பகங்களிலும் அவரை சேர்த்துக் கொள்ள விசாரிக்கிறார். எங்கும் யாரென்று தெரியாவரை
சேர்க்க மறுக்கிறார்கள். கடைசியில் மருத்துவமனை ஊழியர்களே அவரை முன்பு பிச்சையெடுத்த
இடத்திலேயே இறக்கி விட்டுவிட்டு தொலைந்து போனதாக அவரது பிரச்சனையை முடிக்கிறார்கள்.
அவரது நிலையை மாற்றவே முடியாது போகும் கையறு நிலையை மருத்துவர் உணரும் தருணம் வலுவாக
அமைந்து ஒரு மனிதன் இத்தனை சிரமப்பட்டு காப்பற்றப்பட்டும் அது அவனது வாழ்வில் எந்த
முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையெனில் நாம் உண்மையில் எதையாவது செய்து விட முடியுமா?
இந்த மனித வாழ்வின் பொருள் என்னவாக இருக்க முடியும் போன்ற ஆதார கேள்விகளை எழுப்புகிறது.
எழுத்தாளரின் தனிமனித அகம் மற்றும் சமூக விதிகள் குறித்த மற்ற கதைகளிலிருந்து மேலெழுந்து
இந்த தொகுப்பின் மிக முக்கிய கதையாக அன்நோன் உள்ளது.
Comments
Post a Comment