முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்
மூக்கன் என்ற திருடன், ஆடு திருட செல்கிறான். கூத்து கலையை முறைப்படி அறிந்தவன். கூத்தில் எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று நினைக்கும் போது பாட்டை மறந்து விட்டு கல்லடி வாங்கிய பெரிய கலைஞர்கள் உள்ளனர் என்று அவர் ஆசிரியர் சொல்லியிருப்பது நினைவிற்கு வருகிறது. திருட்டிலும் அவ்வாறுதான், எதாவது பிசகினால் கொலை செய்யப்பட்டு சங்கிலிகருப்பனின் பரிவாரங்களில் ஒன்றாக இருப்போம் என்கிறார். அவனது அன்றைய களவில் எதிர்பாராமல் தெருநாய் ஒன்றால் பிடிபடும் மூக்கன் தப்பிப்பிழைத்து சைக்கிள் வைத்த திசை மறந்து ஓடுகிறான். அந்த நள்ளிரவில் நீண்ட நேரம் ஓடி பொட்டலில் இருக்கும் நீரற்ற கிணற்றில் விழுகிறான்.
விழும்போது அவனது நினைவு பிசகி குறைக்கும் நாயும், தனது இருண்ட
அறையில் கதவு ஜன்னல்களை திறக்க முடியாமல் தனித்தும், ஆழத்தில் அமிழ்ந்து கொண்டே மணலால்
மறைந்து போவதாகவும் தோன்றுகிறது.
பின்பு நினைவு தெளிந்து தப்பிக்கும் முயற்சியில் சக்திகளை
இழந்து உரக்க கத்தி கூப்பிட வலுவற்று உள்ளே இருக்கும் நாயின் எலும்பில் சீழ்க்கை எழுப்பி,
பயன்தராது மயங்குகிறான். அவனது அருகாமையில் ஒரு மெல்லிய கரிய கன்னியை காண்கிறான். வேலாள்
என்னும் அவள் முகலாய படையெடுப்பிற்காக பயந்து அவளது அப்பாவாலும் குடும்பத்தினராலும்
கிணற்றில் உயிரோடு தள்ளி விடப்பட்டவள்.
மூக்கன் நாசிக ரிஷியின் இந்திரனின் வரம் வேண்டும் கதையையும்
அதன் படி நாயாக மாறி காதல் அன்பு காமத்தை 1000 வருஷமாக துய்ப்பதையும் சொல்கிறான்.
தனக்கு ஒரு முத்தம் வேண்டும் என்பவளிடம் தான் இப்போது திருடனாக
இருப்பதையும் நாயாக மாறினால் தான் தன்னால் இயல்பான முத்தத்தை தரமுடியும் என்று சொல்லி
வெளியே போக வழி செய்கிறான். தப்பிக்கும் எண்ணத்துடன் வெளியேறும் அவன் எதாவது கோயிலுக்குள்
சென்றுவிட்டால் வேலாளால் பின் தொடர முடியாது என்று எண்ணுகிறான்.
தன் உக்கிர முகத்தை காட்டும் அவளிடம் நாயாக மாறி முத்தமிடுகிறான்.
வெட்கி சிரித்து மீண்டும் அந்த கிணற்றுக்கு செல்லும் அவளை பின் தொடர்ந்து கிணற்றின்
வெளியே நின்று வெறி கொண்டு குலைப்பதாக கதை முடிகிறது.
மூக்கன் என்பவன் ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக வருகிறான்.
அவனது சாமி அவனது தொழில் எல்லாம் விரிவாக சொல்லப்படுகிறது, வேலாளுக்கு சொல்லும் நாசிக
ரிஷி கதையில் அவர்களின் பண்பாடு முழுமையாக வெளிப்படுகிறது. காதல் அன்பு காமம் இவற்றை
மட்டுமே முக்தியை விட உயர்வாக எண்ணும் ஒரு சமூகத்தின் பிரதிநிதி.
இன்னொரு பக்கம் வேலாள். எட்டு கிராமங்கள் தங்களின் கீழும்,
நெல்லும், பொன்னும் கொண்ட ஆளும் வர்க்க குடும்ப பெண்களின் பிரதிநிதி. மூன்று வயதுக்கு
மேல் வீட்டை விட்டு வெளியே போகாதவள். 18 வயதில் முகலாய படைகளுக்கு அஞ்சி குடும்பத்திலேயே
கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டவள். பெண்களை ஒரு உடமைப் பொருளாகவும் இரத்த தொடர்ச்சியாகவும்
மட்டும் பார்க்கப்பட்ட ஒரு உயர் சமூகத்தின் தீவிர ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்.
இந்த இரு பண்பாடுகளும் தற்போது உரையாடும் அந்த கிணறு, சோழர்
காலத்தில் தோண்டப்பட்டு மங்கம்மாள் காலத்தில் கைவிடப்பட்ட அந்த பண்பாட்டின் வரலாற்று
சித்திரம் மிக நுட்பமாக சொல்லப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் ஆணின் ஆழ்மனமும் உயர்
குடியில் பிறந்து ஒடுக்கப்பட்ட பெண்ணின் ஆழ்மனமும் சந்திக்கும் அந்த புள்ளியில் காமம்
மீதுறுகிறது. உலகியல் இன்பங்களிலேயே திளைக்கும் ஒரு சமூக மனிதனின் முத்தத்திற்கு ஏங்குகிறாள்
உலகியல் இன்பங்கள் அனைத்தும் மறுக்கப்பட்ட அந்த உயர்குடி பெண்.
அவள் கேட்கும் முத்தத்தினை பாதையாக கொண்டு தப்பி விட நினைக்கும்
அவனுக்கு அவளின் உக்கிர முகத்தை கண்டு நாயாக மாறி முத்தமிடுகிறான். அந்த உக்கிர முகமே
மூக்கனுக்கு அன்பை வெளிப்படுத்த கூடியதாக அமைகிறது போலும். பின்பு சாந்தமாகி வெட்கி பின்னால் ஓடிச்சென்று அந்த கிணற்றினுள்
மறைகிறாள் என்பதும் அவன் கிணற்றின் வெளியே நின்று வெறி கொண்டு குலைக்கிறான் என்பதும்
மிக தீவிரமான சிந்தனைகளை உருவாக்குகிறது.
முதல் எல்லையை கடந்த அவளால் முற்றிலும் கடக்க முடியவில்லை.
அவள் மீது கொண்ட அன்பு அவளை அடைய முடியாமல் தவிக்கிறது என்று இந்த உரையாடல் சமகாலத்தில்
நடப்பதாக எண்ண முடிகிறது. மிக மிக தீவிரமான சம கால பிரச்சினையைப் பற்றிய கதையாகவும்
பண்பாட்டின் இரு அம்சங்களின் தீர்க்க முடியாத மர்மமாகவும் பிரமிப்பை அளிக்கிறது.
இந்த கதையின் புரிதல்கள் அனைத்தும் குழுவில் உரையாடிக் கொண்டிருக்கும்
போதே உருவாகி வந்தவை. நன்றி வேலாயுதம் பெரியசாமி மற்றும் நண்பர்கள். ஒரு வைரத்தை வைரம்
என்று அறியாமல் கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஒளிவிடத் துவங்குவது போல்
இந்த கதையை அறிய முடிந்தது.
நாள் 13.11.2024
Comments
Post a Comment