கவிதையின் மதம் - தேவதேவன்
கடந்த ஜூலை 6 அன்று தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனுடன் ஒரு நாள் அமர்வு நடந்தது. கவிஞர்
வேணு வேட்ராயன் அவர்களின் முன்னெடுப்பில் தொடக்க நிலை கவிதை வாசிப்பாளர்களுக்காக நிகழ்ந்த
அமர்வில் 19 பேர் கலந்து கொண்டனர். முன்பே கவிதையின் மதம் புத்தகம் மற்றும் தேர்வு
செய்யப்பட்ட கவிதை பகுதிகள் பகிரப்பட்டு அனைவரும் வாசித்துவிட்டு வந்திருந்தோம்.
முதலில் தேவதேவன் அவரது கவிதையின் மதம் புத்தகம் சார்ந்து கேள்விகளையும் கவிதை அனுபவங்களையும் அமர்வில் அமைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது அமர்வு முழுவதற்குமான திசைகாட்டியாக அமைந்தது.
எண்ணங்களற்ற
தன்னிச்சையான செயல்கள் அனைத்துமே கவிதை என்றும் அந்தக் கணங்களில் வாழ்வினை தொடர்ச்சியாக
அமைத்துக் கொள்வதையே நாம் செய்ய வேண்டும். அதுவே நம் மீட்சிக்கான வழி என்ற தரிசனத்தை
முன் வைத்து இப்போது இருக்கும் மதங்களையும் அமைப்பினையும் தத்துவங்களையும் நிராகரிப்பதற்கான
தர்க்க பூர்வமான மறுப்பினையும் முன் வைத்திருந்தார். இதற்கு முன் தோன்றிய அனைத்து ஞானிகளாலும்
கருத்துக்களாலும் அறிவினாலும் மனிதர்களின் துன்பத்தை போர்களை நிறுத்த முடியவில்லை.
எனவே இவை அனைத்தும் தோல்வியடைந்தவையே என்கிறார். நான் எனும் எண்ணங்களை, அடையாளங்களை,
மரபினை, பெயரை, நாட்டினை துறந்து எண்ணமற்ற பொழுதில் உருவாகும் செயல்களையே அனைத்திற்கும்
மாற்றாக முன்னிறுத்துகிறார்.
இதுவே என் செய்தி
இயேசுவே
மதமாகிய
சிலுவையிலிருந்தும்
உம்மை
நான் மீட்பேன்
இதுவே
என் சேதி என் தந்தையே.
உமது ஆசைகளையும் தோல்விகளையும்
கண்ணீரையும்
இரத்தத்தையும்
நான்
அறிவேன்.
துயர்
நீக்க அறிந்த
கவிதையின்
மதம் உலாவும்
கடவுளின்
ராஜ்ஜியத்தில்
உம்மை
நான்
இளைப்பாற்றுவேன்
என் தந்தையே.
கவிதை என்பதை வாழ்க்கையாகவே சொல்கிறார். எல்லா உயர்ந்த தருணங்களும் செயல்களும் கவிதைகளே என்பதே தேவதேவனின் முடிவு. கவிதையை கலையாக்கிவிட்டால் அன்பு செலுத்த முடியாமலாகிறது. எந்திரங்கள் போல கவிதை உற்பத்தி நிகழுமே தவிர அவை கவிதை ஆகாது. உண்மையாக வாழ்ந்தால் எளிமையான சொற்களில் கவிதைகள் வெளிப்படும்.
உதாரணமாக
கல்யாணத்தில் கண்ட வணக்கம் சொல்லும் பொம்மையை கண்டபோது அவர் அடைந்த அனுபவத்தை பகிர்ந்து
கொண்டார்.
கவிதை
உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது. கவிதையை கவிதைதான்
மதிப்பிட முடியும். வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
கவிதை
என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டு, ரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின்
அற்புதத்தின் குறியீடாகவும், பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து
வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.
நாம் மரணத்திற்கு அஞ்சுவதோ, இறப்பினால் துயரமடைவதோ நம்முடைய தன்னுணர்வினால் நிகழ்கிறது. கவிதையின் மதத்தில் இருப்பவனுக்கு இவை துயரளிப்பதல்ல என்கிறார்.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை என்னும் கவிதையில்
ஒரு நாள் என் தோட்டத்தில் ஈரத்தரையில்
உதிர்ந்த
ஒரு மலர் போல் அது கிடந்தது
நல்லடக்கம்
செய்யும் சுற்றமோ
மறைவுக்குக்
கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ
தேசமோ இன்றி
அது
அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும்
பார்வையின் முத்தம்
ஒரு
கவிதை –
இவைதானோ
அதன் மொத்த
வாழ்க்கையின்
மர்மமான
இலட்சியம்?
இன்று
அது நிறைவேறியதையோ
எளிய
உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய்
அதை எடுத்து செல்ல
முயல்வதையோ
கண்களில்லாத
கால்கள்
அதை
மிதித்தபடி செல்வதையோ
ஒரு
பெருக்குமாறு அதை குப்பைகளோடு
குப்பையாய்
ஒரு
மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றிய
கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும்
அதுவே
ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான
என் தோட்ட நிலத்தில்
மரித்துக்
கிடந்தது அது.
மேலும் இயற்கையின் கருணையை அறியாதவனுக்கு அவர்
ஒரு அனாதைப்பிணம் தனியாக இருப்பதில்லை
அதன் மீது எவ்வளவு ஈக்கள் மொய்த்திருக்கின்றன
என்று
சொல்லி செல்கிறார்.
மதம் மனிதனின் நன்மைக்காகவே உள்ளது மனிதர்களே அவற்றை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற வாதத்தினை முன் வைப்பவர்களை கடுமையாகவே எதிர்க்கிறார். அப்படியானால் உங்களுக்கு மதம் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு அடையாளத்தை சூடிக் கொள்ளும் விழைவு தான் அது என்கிறார்.
கடவுள் எனும் கவிதையில்
மனிதனால்
மனிதனுக்கு உருவான துயரத்தை மட்டும்
மனிதனே
துடைக்கட்டும் என்று விட்டுவிட்டார்
கடவுள்
மேலும்
அவருக்கே
அது புரியாதல்லவா?
என்கிறார்.
அதே போன்றே ஒரு ஆளுமையினை பெரிதாக எண்ணிக் கொள்பவர்களையும் நிராகரிக்கிறார். கவிஞர்கள் அபூர்வ மனிதர்கள் என்பதையோ பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள் என்பதையோ, இன்னும் எத்தனை பெரிய மனிதர்களை, தத்துவங்களை, மதங்களை இன்னும் நம் மடத்தனத்தால் உருவாக்கிக் கொள்ளப் போகிறோம்?
உதாரணமாக திருவள்ளுவரின் பற்றுக பற்றறான் பற்றினை பற்று விடற்கு என்ற குறளினைக் கொண்டு அவரை அசாதாரண கவியாக காணும் போதே தோன்றின் புகழொடு என்ற குறளில் அவரை நிராகரிக்கவும் செய்கிறார்.
இது வரையிலான எந்த ஆளுமை வழிபாடும் மக்களுக்கு மீட்பாக அமையவில்லை என்று சொல்லி தன்னையும் அவர் நிராகரிக்கிறார். தனது கவிதைகளை மட்டுமே முன்னிறுத்துகிறார். அதனால் தான் தனது பெயரை தேவதேவன் என்று வைத்துக் கொண்டுள்ளேன்.
உடைந்த
பூமியை மீண்டும் ஒட்டுவதற்கு பூமிக்கு வெளியே இருப்பவனால் தான் முடியும் என்கிறார்.
தன்னை நிராகரிப்பது என்பது எத்தனை கடினமானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டோம். அதில் தன்முனைப்பிற்கும் செயல் விழைவிற்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு, கடவுளின் ராஜ்ஜியத்தில் கவிதையின் மதத்தில் வாழ முடியாது போகிறது என்பது பேரதிர்ச்சியாகவே இருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தனது செயலின் வழியை தேர்வு செய்யவும் அதன் வழியே தன்னை ஆராய்ந்து வெளிப்பட்டு இந்த வாழ்வினை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தவர்களுக்கு ஒன்றுமே எண்ணாமல் நீங்கள் செய்யும் செயலே முதன்மையானது என்று சொல்பவர் உருவாக்கும் பதற்றம் வெவ்வேறு கேள்விகளாக வெளிப்பட்டது.
ஒரு உரையாடல்
நான் இல்லாதபோது, அன்பே
நீ
என்ன செய்து கொண்டிருந்தாய்?
நான்
உன்னையே நினைத்துக் கொண்டிருக்க
வேண்டும்
என நீ ஆசைப்படுகிறாயோ?
என்
செயல்களை அறியும் ஆர்வமோ?
நீ
இல்லாத போது
நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை
யோசித்துப் பார்.
அதுவேதான்,
அதுவே
நாம் அடைய வேண்டிய
வழியும்
ஓளியும் வாழ்வும்!
இந்த கவிதையின் தருணத்தை குழந்தைமையாக களங்கமின்மையாக ஒவ்வொருவரும் அறிந்து தான் இருக்கிறார்கள். அதை அறியாத ஒரு மனிதனும் இல்லை. இந்த கால இடமற்ற கவிதையின் கணத்தில் வாழும் மனிதன் கடவுளாகவே இருக்கிறான். அந்த கவிதை தருணம் தான் நாம் வாழ வேண்டிய மதம் என்று உணர்ந்து வாழ்வாக மாற்றிக் கொள்வதையே நாம் செய்ய வேண்டியது, மனிதன் தனது காம குரோத மோகங்களுக்காக பல சாக்கு போக்குகளை தேடிக் கண்டுபிடித்து கொள்கிறான் என்கிறார்.
அப்போது
எல்லாவற்றையும்
களைந்து
நின்ற
காலமற்றபோதே
கடவுளானேன்
இதைச்
சொல்லும்
இப்போது
தவிர.
கடவுளின்
போது
நானில்லை
நீயுமில்லை
ஒரு
சொல்லுமில்லை
காதலும்
செயலும்
மட்டுமே
இருந்தன
அப்போது.
இந்த சமூக கட்டமைப்பிலிருந்து தப்பிக்கும் வழியாகவே ஆண்டாளும் காரைக்கால் அம்மையாரும் பக்தியை பற்றிக் கொள்ள நேர்ந்தது. காரைக்கால் அம்மையார் பேயுருக் கொண்டார் என்பதையும் இதே கோணத்தில் புரிந்து கொள்ளலாம் என்று கூறியது புதிய பார்வையாக இருந்தது.
இங்கிருக்கும் கடவுள் சிலைகளும் கோவில்களும் தேவையற்றதும் தோல்வியடந்தவையுமாக இருக்கிறது. இவை இருப்பதினால் தான் இயற்கையை மனிதன் பார்க்க மறுக்கிறான். அதன் பெருங்கருணையையும் இயற்கையை தாண்டிய ஒத்திசைவையும் அறிந்து கொள்ளாது போகிறான்.
ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை
ஒரு
மரத்தடி நிழல் போதும்
உன்னை
தைரியமாய் நிற்க வைத்துவிட்டுப்
போவேன்
வெட்ட
வெளியில் நீ நின்றால்
என்
மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில்
நிற்கையில்தான்
நீ
அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிப்பெண்ணை
அவள்
தாயிடம் சேர்ப்பது போல
உன்னை
ஒரு மர நிழலில் விட்டுப்போக
விழைகிறேன்
மரங்களின்
தாய்மை
முலை
முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின்
காற்று
வாத்சல்யத்துடன்
உன் தலையை கோதும்
மரம்
உனக்கு பறவைகளை
அறிமுகப்படுத்தும்
பறவைகள்
உனக்கு வானத்தையும்
தீவுகளையும்
வானமோ
அனைத்தையும்
அறிமுகப்படுத்திவிடும்
ஒரு
மரத்தடி நிழல் தேவை
உன்னை
தைரியமாய் நிற்க வைத்து
விட்டுப்
போவென்
இந்த பெருங்கருணையையும் பேரன்பையும் மனிதன் உணர்ந்து கொண்டால் அவனுக்கு வெறுப்பு உணர்வே இல்லை. என்னை உங்களால் கோவப்பட வைக்க முடியாது. நான் கடவுளின் ராஜ்ஜியத்தில் 40 வருடங்களாக வாழ்ந்து வருவதை என்னுடைய கவிதைகளை படிக்கும் போது என்னால் உணர முடிகிறது.
பிரமிள் அவரது வெறுப்புணர்வினால் தான் அவருக்கு நிறைய எதிரிகளை உருவாக்கி கொண்டு எதிர்ப்பவராக சுருங்கிப் போனார். தமிழ் இலக்கியச் சூழல் அவரை பலி கொண்டது. பிரமிளின் கருத்துக்களை அவரை விட தீவிரமாகவும் அதிகமாகவும் சொல்லியிருக்கும் நான் அனைவருக்கும் அன்புக்கு உரியவனாகவே இருக்கிறேன். ஏனெனில் இந்த எதிர்ப்புக் கவிதைகளை மனிதர்களின் மீது கொண்ட அன்பினால் தான் நான் எழுதியிருக்கிறேன்.
ஒசாமா பின்லேடன்
எவ்வளவு
கம்பீரமாய் ஒலிக்கிறது உன் பெயர்
என்
பெயரைப் பொலவே
உன்னைப்
போலவே
ஒவ்வொரு
கவிஞனும் – நானும் –
ஒரு
தீவிரவாதிதானே
ஒரு
சிறு வேறுபாடு மாத்திரமே உண்டு
உன்னிடமிருப்பது
அறியாமையும் வெறுப்பும்
இக்கவிஞனிடமிருப்பதோ
ஞானமும் அன்பும்
அன்பு
மீதூறி நான் உன்னை
ஆரத்
தழுவிக்கொள்ளும் இவ்வேளை
இதோ
யுத்தம் முடிகிறது
சாந்தி
மலர்கிறது
யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்
குப்பைதொட்டியோரம்
குடித்துவிட்டு
விழுந்துகிடப்போனை.
வீடற்று
நாடற்று
வேறெந்தப்
பாதுகாப்புமற்று
புழுதி
படிந்த நடைபாதையில்
பூட்டு
தொங்கும் கடை ஒட்டிப்
படுத்து
துயில்வோனை.
நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கி
கைக்குழந்தை
குலுங்க அழுது கொண்டு ஓடும் பெண்ணை.
நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும்
அட்டனக்காலுமாய்
வானம்
வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை.
எதையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில்
விரைவோனை.
காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கவிலங்குடன்
அழைத்துச்
செல்லப்படும் ஒற்றைக் கைதியை.
நான் மிகவும் நேர்மறையான கவிதைகள் மட்டுமே எழுதியவனாக கருதிக் கொள்கிறார்கள். ஆனால் நான் பெண்களைப் பற்றிய கடும் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறேன் (உதாரணம் - பாலியல் தொழிலாளி பங்கஜவல்லி கவிதை) ஆனால் அந்த கவிதையில் வரும் பெண்ணாக என்னையே தான் நான் நினைத்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் மனித உணர்வுகள் அது எத்தகைய தீவிரமானதாக இருப்பினும் கவிதையாகாது. ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமி தனது தம்பியின் மீது கொண்டுள்ள அக்கறை பாசமே தவிர அன்பு இல்லை. (உதாரணம் பெரியம்மாவும் சூரியனும் கவிதை).
புதிய ஏற்பாடு கவிதையில் ஆண்கள் அனைவரையும் பெண்ணாக மாறும்படி எழுதியிருப்பதை குறித்து கேட்டதற்கு இளம் வயதில் ஆண் தனித்து அறிய எதுவோ இருக்கும் என்று கருதியிருந்ததாகவும் ஆனால் தற்போதைய நிலையில் நான் எழுதியிருக்கும் கவிதை என்று புதிய ஏற்பாடு பற்றிக் கூறினார்.
ஒரு கவிஞன் அனைத்து புறச் சூழல்களையும் எதிர் கொள்பவனாக இருப்பதினால் எல்லா வகையான கவிதைகளும் உருவாவதும் அதனை எழுதுவதும் முக்கியமானது என்கிறார்.
நம் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேசத்துடன் உள்ளது. நம் கையால் நம்மை தொடுவதன் மூலம் எத்தகைய அன்பினை நாம் உணர்கிறோம். நாம் சும்மா நடக்கும் போது செடிகளை தொட்டுக் கொண்டே செல்வது ஒரு கவிதையின் தருணம் என்றே சொல்கிறார்.
ஒவ்வொன்றையும் தனது மென்மையான குரலில் நிதானமாகவும் உறுதியாகவும் உற்சாகத்தோடும் அவர் பேசியதும், அவரது முன்னால் அவர் விரும்பி சேகரித்து வைத்திருந்த இலைகளும் பூக்களும், நாள் முழுவதுமான அவரது அருகாமையும் ஒரு பேருணர்வை உருவாக்கியது. மாலை நான்கு மணியுடன் அமர்வுகள் முடிந்ததும் அனைவரும் பரவசத்துடன் பேசிக் கொண்டு பிரிந்தோம். நிகழ்வினை ஒருங்கிணைத்த சரண்யாவிற்கு நன்றி.
கவிதையின் மதம்
அதற்குக் கடவுள்கள் இல்லை
கோயில்கள்
இல்லை.
பூஜைகள்
இல்லை
புனித
நூல்கள் இல்லை
சடங்குகள்
இல்லை
தனித்து
நிற்கும் ஆசாரங்கள் இல்லை
பரப்புவதற்கும்
விரிப்பதற்குமான
தத்துவங்கள்
இல்லை.
அது
தன்னைத்தானே விளக்குவதால்
அறிஞர்களும்
புலவர்களும்
அதற்கு
தேவையில்லை
கவிஞர்கள்
கூடத் தேவையில்லை
ஆனால்
அதன் இலட்சியமோ
மனிதர்கள்
எல்லோரையுமே
கவிஞர்களாக்கிவிடுவதாயிருப்பதுதான்
விந்தை.
இலட்சியம்
கொண்டிருக்காத
வேளையிலெல்லாம்
அது
தன்னை மறைத்துக் கொண்டு
சுதந்திரமாக
வாழ்கிறது
இலட்சியம்
கொண்டிருக்கும்போதெல்லாம்
அச்சத்தால்
நாம் உருவாக்கியிருக்கும்
அனைத்துக்
கட்டுமானங்களையும் உடைத்து –
தன்
இலட்சியத்தையும் கூட –
நொறுக்கியபடிதான்
தன்னை
வெளிப்படுத்துகிறது அது.
Comments
Post a Comment