புலிக்கட்டம் சிறுகதை - எஸ் ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்

புலிக்கட்டம் சிறுகதையின் துவக்கத்தில் களவாட சென்று ஓடு உடைந்து வீட்டுக்குள் விழும் திருடனை ஊர்க்காரர்கள் சேர்ந்து புங்க மரத்தில் கட்டி வைக்கின்றனர். அன்று இரவு முழுவதும் கொட்டும் பனியில் பசி மயக்கத்தில் கிறங்கி நிற்கும் அவனது எண்ண ஓட்டங்களும், கிராம வாசிகளின் முன்பே ஒருமுறை திருடனை பிடித்து அவனை கட்டி வைத்ததால் இறந்து போன உறுத்தலும் சந்திக்கும் புள்ளி தான் கதையாகிறது.

கன்னம் ஒட்டிய ஒடிசலான இந்த திருடனை, திருடன் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி உருக்குலைந்து இருப்பவன் எதையாவது திருடி வீட்டிற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருட சென்று பிடிபடுகிறான். அவனது குழந்தையில்லா மனைவியின் நினைவுகளும், அவளது பெட்டியில் இருக்கும் வாடிய தாழம்பூவின் நினைவுகளும் உருவாகிறது.

பின்பு சிறு வயதில் அவனது அப்பாவினோடு கீதாரிகள் வரும் சமயங்களில் அவர்களோடு சென்று தங்கிய நினைவுகளும், அவர்களில் ஒருவனோடு அப்பா ஆடிய ஆடு புலி ஆட்டமும் நினைவிற்கு வருகிறது. அந்த ஆடு புலி ஆட்டத்தில் வரிசையாக புலியை நகர விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதால் கோபமுறும் அவனது தந்தை, நள்ளிரவில் இடுப்பிலிருக்கும் கத்தியை பிடித்துக் கொண்டு, விளையாட அழைக்கும் சித்திரம் நுட்பமானது. அவன் நினைத்தால் கொன்று விடலாம். உடனே அவன் காலில் விழுந்து தன் குடும்பத்தை பற்றி சொல்லும் அந்த கீதாரியை புலியாக மாறி நிற்கும் அவனது தந்தை ஒன்றும் செய்யவில்லை. அன்று அந்த சிறுவனுக்கு எழும் ஆட்டுக்குட்டியின் பால் மணம் அவனுக்கு உணர்த்தியது எதை? புலியின் கருணையையா?

புங்க இலைகளை கட்டிக் கொண்டு அப்பா வேட்டைக்கு செல்லும் போது தெருவெல்லாம் சேவல்களின் இரத்தம் பலி கொடுத்து அந்த வேட்டைப்புலியை அரணாக நிறுத்தியிருக்கிறது அந்த ஊர் என்று தோன்றுகிறது.

கிராமத்தில் ஏற்கனவே திருட வந்தவன், முதுகில் தேள் பச்சை குத்தியிருந்தவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்ததில் அவன் இரவெல்லாம் திமிறி தன் பலம் முழுவதையும் திரட்டி கட்டினை அவிழ்க்க முயற்சி செய்து இறந்து போயிருப்பான். அவனை அடையாளம் காண முடியாது போய் ஊர்க்காரர்களே மூன்று நாள் கழித்து அடக்கம் செய்திருப்பார்கள். அந்த வருடம் மழை பொய்த்து, ஊர் பெண்களுக்கு துர் சொப்பனம் எழுந்து அச்சமடைந்து அந்த திருடனை கட்டிய மரத்தை வெட்டி விடுவார்கள். அவன் உயிர் போனதன் குற்ற உணர்ச்சி அவர்களுள் வடுவாக தங்கி விடுகிறது.

இப்போது பிடிபட்டு கட்டப்பட்டிருக்கும் இந்த திருடனின் காவலுக்கு ஒரு ஆள் நிறுத்தப்படுகிறது. திருட வந்தவனை தண்டிக்காமல் விட முடியாது, அதே நேரம் அவனது பசியை ஆற்றி விட்டு அவனை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்கின்றனர். இந்த முறை திருட வந்தவனின் அடையாளத்தை ஒரே நிமிடத்தில் கண்டு கொள்வதில் இருந்து அவன் அவர்கள் அறிந்த ஒருவன் என்று தோன்றுகிறது.

கதையில் வரும் இரு எறும்புகளின் உருவகம் அந்த ஊர் மக்களின் தவிப்புகளாக மாறுகிறது. மரத்தில் இருந்து வழக்கமாக செல்லும் பாதையில் திருடன் ஒருவன் நிறுத்தப்படுவதால் அது குழப்பத்திற்கு ஆளாகி அவனது முகம், நெற்றி, காது, கழுத்து என ஊர்ந்து ஒன்றும் சரிப்படாததால் மீண்டும் மரத்தின் மீதே ஏறிக்கொள்கிறது. திருடன் அழைத்து சென்றுவிட்ட பின்பும் அவன் இல்லாத உணர்வை சற்று நேரம் உணர்ந்து பின்பு தன்னியல்பிற்கு திரும்புகிறது.

இறுதியாக இந்த கதை ஒரு திருடனை கொன்றதற்காக குற்ற உணர்வு கொண்டு அதற்கு பிழை நிவர்த்தி செய்து கடவுளாக ஏற்கும் ஒரு சமூகம், வறுமையில் களவாட வரும் திருடனை அவனது பசியை தீர்த்து அவனை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்கிறது என்ற நிதர்சனமான ஒரு முடிவை சென்று தொடுகிறது.

அவன் இறந்தான் என்றால் வேண்டுமானால் கடவுளாக ஆக்கி கொள்ளலாம். உயிரோடு இருக்கும் திருடன் போலீசில் தான் பிடித்து கொடுக்கப்படுகிறான் என்ற சமூக மனநிலையின் முரண்பாட்டை அல்லது சமூக ஆழ் மனநிலைக்கும் யதார்த்தத்திற்குமான முரண்பாட்டை ஆராயும் மிக நுட்பமான கதை என்று தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பு - வாசிப்பு

முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்

கவிதையின் மதம் - தேவதேவன்