கவிதையின் மதம் - தேவதேவன்
கடந்த ஜூலை 6 அன்று தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனுடன் ஒரு நாள் அமர்வு நடந்தது. கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களின் முன்னெடுப்பில் தொடக்க நிலை கவிதை வாசிப்பாளர்களுக்காக நிகழ்ந்த அமர்வில் 19 பேர் கலந்து கொண்டனர். முன்பே கவிதையின் மதம் புத்தகம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கவிதை பகுதிகள் பகிரப்பட்டு அனைவரும் வாசித்துவிட்டு வந்திருந்தோம். முதலில் தேவதேவன் அவரது கவிதையின் மதம் புத்தகம் சார்ந்து கேள்விகளையும் கவிதை அனுபவங்களையும் அமர்வில் அமைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது அமர்வு முழுவதற்குமான திசைகாட்டியாக அமைந்தது. எண்ணங்களற்ற தன்னிச்சையான செயல்கள் அனைத்துமே கவிதை என்றும் அந்தக் கணங்களில் வாழ்வினை தொடர்ச்சியாக அமைத்துக் கொள்வதையே நாம் செய்ய வேண்டும். அதுவே நம் மீட்சிக்கான வழி என்ற தரிசனத்தை முன் வைத்து இப்போது இருக்கும் மதங்களையும் அமைப்பினையும் தத்துவங்களையும் நிராகரிப்பதற்கான தர்க்க பூர்வமான மறுப்பினையும் முன் வைத்திருந்தார். இதற்கு முன் தோன்றிய அனைத்து ஞானிகளாலும் கருத்துக்களாலும் அறிவினாலும் மனிதர்களின் துன்பத்தை போர்களை நிறுத்த முடியவில்லை. எனவே இவை அனைத்தும் தோல்...